ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பு – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை திமுக, பாமக, நாதக கட்சிகள் அறிவித்த நிலையில், இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“தேர்தல் என்ற உடனேயே, முதலாவதாகக் களத்தில் இறங்குவது அதிமுக தான். தேர்தலைக் கண்டு அஞ்சுகின்ற, பயப்படுகின்ற, அச்சப்படுகின்ற இயக்கம் அதிமுக அல்ல என்பதை அனைவரும் நன்கு அறிவர். திமுக ஆட்சியில், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஜனநாயக முறைப்படி சுதந்திரமாக நடைபெறுமா என்ற சந்தேகமும், கேள்வியும் எழுந்துள்ளது.
எதிர் வரும் 2026, சட்டமன்றப் பொதுத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நல்லாசியோடும், தமிழக மக்களின் பேராதரவோடும், மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அதிமுகவின் மக்கள் ஆட்சி மீண்டும் மலர்வது உறுதி என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்”
இவ்வாறு அந்த அறிக்கையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.