இலங்கையில் கொட்டும் மழையில் பொங்கல் கலாச்சார விழா நடைபெற்று வருகிறது.
இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் சுற்றுலா துறை சார்பில் ஜன.6-ம் தேதி முதல் ஒரு வாரம் பொங்கல் விழா தொடங்கியது. இந்த விழா ஒரு வாரம் நடைபெறும். இவ்விழாவின் முதல் நிகழ்வாக ஜல்லிக்கட்டு போட்டி ஜன.6-ம் தேதி காலை 10 மணிக்கு திரிகோணமலை, சம்பூர் பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.
இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மலேசியா எம்.பி. டத்தோ ஸ்ரீ முருகன் சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நடத்தப்பட்ட இந்த ஜல்லிக்கட்டில் இலங்கை அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் நந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து இன்று (ஜன.08) மாபெரும் பொங்கல் கலாச்சார விழா நடைபெற்று வருகிறது.
இவ்விழா திரிகோணமலை ஹிந்து கல்லூரி மைதானத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் 1008 பானையில் பொங்கல் வைக்கின்றனர். மேலும், 1500 பரதநாட்டிய கலைஞர்களின் பரதம் ஆட உள்ளனர்.
மேலும், 500 கோலங்கள் என பொங்கல் கலாச்சார விழா பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஜன.08) காலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கொட்டும் மழையிலும் பொங்கல் விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது.