திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனைய திறப்பு விழா நாளை (02.01.2024) நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்கும், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் 38வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்கும் பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வருகிறார். இதன் காரணமாக திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குறிப்பாக திருச்சி விமான நிலையத்தில், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும், வெளிப்பகுதியில் மாநகர காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பிரதமர் மோடி திருச்சி வருகையின் போது திருச்சியில் 33,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சொல்லப்படுகிறது. விமான நிலையத் திறப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் நாளை (02.01.2024) திருச்சிக்கு வருகை தரும் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது அதிமுக விவகாரம், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேச உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. எனவே பிரதமர் மோடி – ஒ.பி.எஸ் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.